வெகுநாளாக நான் படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்த கதை நமது முத்து காமிக்ஸில் வெளிவந்த சிறை மீட்டிய சித்திரக்கதை. எனக்கு இந்த கதையின் தீரா ஆவல் வர காரணம் இலுமினாட்டி எழுதிய இக்கதை பற்றிய
இந்த பதிவு. மேலும் முத்து ஃபேன் அவர்கள் எழுதிய
இந்த பதிவு. அடுத்த முக்கிய காரணம், இக்கதை நமது எடிட்டர் விஜயன் அவர்களின் விருப்பமான டாப் 10 கதைகளில் ஒன்று. இக்கதையை பற்றி விஜயன் அவர்கள் தனது டாப் 10 பட்டியலில் கூறியதை கீழே காணலாம்.
இக்கதை நமது முத்துவில் 1975 ஆம் வருடம் முதலில் வெளிவந்தது. அதன் பின் மீண்டும் மறுபதிப்பும் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு பதிப்புகளின் அட்டை படங்களை கீழே காணலாம். (தகவல் மற்றும் அட்டை படங்கள் முத்து ஃபேன் வலைப்பூவிலிருந்து)
இக்கதையின் கதாநாயகன் தமிழில் சார்லி. ஆனால் ஆங்கில மூலத்தின் ஒரிஜினல் பெயர் பஸ் சாயர்(Buz Sawyer). பஸ் சாயரின் கதைகள் இந்திரஜால் காமிக்ஸ் , மேகலா காமிக்ஸில் கூட வெளிவந்துள்ளது. இக்கதையை படிக்க பல பேரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. சரி ஸ்கேன் பண்ணியாவது தாங்கப்பா என கேட்டும் கிடைக்கவில்லை. கடைசியாக இக்கதையை பற்றி
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! என தலைப்பிட்டு பதிவிட்ட நம்ம ஜானியிடம் கேட்டும் கிடைக்கவில்லை. காமிக்ஸ் கிளாசிக்ஸில் வெளியிடுவார் என நினைத்திருந்தால் நமது எடிட்டரும் பஸ் சாயரின் மற்றொரு கதையான குரங்கு தேடிய கொள்ளையர் கதையை தான் வெளியிட போவதாக கூறி விட்டார்.
சரி இணையத்தில் ஆங்கில மூலத்தை தேடி படிக்கலாம் என்றால் இக்கதை வெளியான வருடம் மற்றும் எதில் வெளியானது என்பது பற்றி சிறு தகவல் கூட கிடைக்கவில்லை. தமிழ் காமிக்ஸ் ரசிக பிதாக்கள் பலரிடம் கேட்டும் யாருக்கும் தெரியவில்லை. இருந்தும் தேடினேன் தேடினேன் நான்கு வருடங்களாக தேடினேன் கிடைக்கவில்லை. ஏன் சிறு தகவல் கூட கிடைக்கவில்லை. கதையின் ஆங்கில பெயரும் தெரியாததால் எப்படி கூகுளில் தேடுவது என தெரியவில்லை. buz sawyer என தேடினால் பழைய கதைகள் அல்லது ஏற்கனவே தெரிந்த கதைகளே கிடைத்தன.
எதிர்பார்த்தது எதிர்பாராமல் கிடைக்கும் என்பதை போல இரண்டு வாரங்களுக்கு முன் முத்து ஃபேன் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருந்த போது மீண்டும் அவர் பதிவிட்ட இக்கதை பற்றிய பதிவை படித்தேன். அதில் இக்கதையில் முக்கியமாக பங்கேற்கும் சித்திரக்கதை வெளியிடும் Bangkok Post என்ற பத்திரிக்கை பற்றியும் கூறியிருந்தார். இந்த Bangkok Post என்ற வார்த்தையை வைத்து தேடியதில் இந்த கதையை பற்றிய விபரம் கிடைத்தே விட்டது. அப்போது நான் அடைந்த சந்தோசத்தை சொல்லி மாளாது. அதை நம்மை போன்ற காமிக்ஸ் ரசிகர்களே உணர முடியும்.
ஓகே விஷயத்திற்கு போவோம். எனக்கு கிடைத்த தகவல்படி இக்கதை வெளியான வருடம் 1974. Muscatine Journal என்ற தினசரி ஆங்கில பத்திரிக்கையில் செப்டம்பர் 3 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 16 ஆம் தேதி வரை தினந்தோறும் மூன்று படங்களாக தொடராக வெளிவந்திருக்கிறது. இந்த பத்திரிக்கை ஞாயிறு வெளிவராது. இது வெளிவந்த பக்கத்தின் பெயர் Comics & Features. இதில் Buz Sawyer கதைகளோடு பிற காமிக்ஸ் தொடர்களும் வெளிவந்தது. இக்கதைக்கு இதில் பெயர் இல்லை.
அப்பாடா கதை கிடைத்து விட்டது. இனி முழுவதாக படித்து விடலாம் என மகிழ்ந்து கொண்டிருக்கையில் மற்றொரு இடி விழுந்தது. கதை தினசரி பத்திரிகையில் வெளிவந்ததால் எந்த பக்கத்திலும் வெளிவந்திருக்கலாம். ஆகவே அந்த பத்திரிகையில் முதலில் எந்த பக்கத்தில் வந்துள்ளது என கண்டுபிடிக்க வேண்டும். இது கூட அவ்வளவு கஷ்டமில்லை. அந்த தளத்தில் இலவசமாக ஒரு நாளைக்கு இரண்டு செய்திதாள்கள் தான் படிக்க முடியும். மேலும் பக்கத்தை டவுன்லோட் செய்ய முடியாது. இந்த கதையை மட்டும் வெட்டி தான் எடுக்க வேண்டும் இல்லாவிடில் 19டாலர் பணம் கட்ட வேண்டும்.
என்னடா இது கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்காது போலவே என நொந்த போது நமது பிளாக்கில் ஓட்டெடுப்பு நடத்தும் போது கள்ள ஓட்டு போடுவோமே அந்த யுக்தி நியாபகம் வந்தது. அதை பயன்படுத்தி இரண்டு நாட்கள் ஒரே மூச்சாக பக்கங்களை வெட்டி எடுத்து விட்டேன். என்னுடைய இந்த வீரபிரதாபங்களை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பழைய காமிக்ஸ் கதை பல நாட்களாக தேடி கையில் கிடைக்கும் போது எனக்கு கிடைக்கும் சந்தோசம் அளவில்லாதது. இன்றைய பரபர இயந்திர உலகிலிருந்து காலஇயந்திரம் மூலம் சிறுவயதிற்கே மீண்டும் சென்று விட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. கதையின் முதல் பக்கம் கீழே

கதையில் நமது இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. காஸ்மீர்,கல்கத்தா மற்றும் எவரெஸ்ட் போன்றவை வருகின்றன. கதையை ஏற்கனவே இலுமினாட்டி அலசி, ஆராய்ந்து, சிலாகித்து விட்டதால் இதோ கதை சுருக்கம். உலகை சுற்றும் சித்திரக்கதை வரைவதில் ஆர்வம் கொண்ட கெல்லி , காஸ்மீரில் ஃபூவி என்ற பெண்ணை சந்தித்து காதல் கொள்கிறான். இவர்கள் இந்தியாவிற்கு பக்கத்தில் உள்ள ஒரு நாட்டிற்க்கு செல்லும் போது ஃபூவி அங்கே இருக்கும் ஒரு குதிரைவீரன் சிலையில் ஏறி போட்டோ எடுத்ததற்காக அவமதிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். கதையின் கடைசி பக்கம் கீழே
சிறையில் அடைக்கப்பட்ட ஃபூவியை நமது கதாநாயகர் சார்லி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை. ஃபூவியை காப்பாற்றுவதில் ஒரு சித்திரக்கதை எப்படி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை கதையை படிக்காதவர்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த லிங்க்கை கிளிக் செய்து ஆங்கில கதையை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- லக்கி லிமட்